மதுரையில் '‛முதல்வர் மருந்தகம்' 22 இடங்களில் தயாராகிறது

மதுரை : மதுரை மாவட்டத்தில் 22 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்கள்' துவங்கப்பட உள்ளது.

கூட்டுறவுத்துறையின் சார்பில் ஏற்கனவே 22 இடங்களில் கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. தற்போது கூடுதலாக 22 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட உள்ளது.

கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி கூறியதாவது:

தனியார் கிளினிக்குகள் மருந்தகத்துடன் செயல்படுவதால் சில கூட்டுறவு மருந்தகங்களில் விற்பனை குறைந்தது. மாநகராட்சி மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள 12 கடைகளில் விற்பனை நன்றாக உள்ளது. பசுமலை, புதுார், பேரையூர், திருமங்கலம், மேலுார் உட்பட 10 இடங்களில் விற்பனை குறைந்துள்ளது.

அதற்கான காரணங்களை ஆராய்ந்து மருந்துகளை கூடுதல் இருப்பாக வைக்க அறிவுறுத்தியுள்ளோம். ஒரு மாதத்தேவைக்கான மாத்திரைகளை மொத்தமாக வாங்குவோர் தற்போது வரை கூட்டுறவு மருந்தகங்களை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கு தான் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. சராசரியாக மாதம் ரூ.60 லட்சம் வரை விற்பனையாகிறது.

தற்போது ஆரப்பாளையம், வில்லாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், சிக்கந்தர் சாவடி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், பழைய கலெக்டர் அலுவலக பூமாலை வணிக வளாகங்களில் 'முதல்வர் மருந்தகங்கள்' துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைகளை குறைந்தபட்சம் டிப்ளமோ பார்மசி முடித்தவர்கள் நிர்வகிப்பர். கூட்டுறவுத்துறையில் இருந்து கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்படுவர். பார்மசி படித்த பட்டதாரி, டிப்ளமோ நபர்கள் கடைகளை நடத்த விண்ணப்பிக்கலாம் என்றார்.

Advertisement