சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பு கூடுதல் கவனம் செலுத்த அரசு உத்தரவு

கம்பம், : சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுச் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

நாள்பட்ட சர்க்கரை - நோய் பாதித்த நபர்களுக்கு கண், சிறுநீரகம் மற்றும் நரம்பு பாதிப்புக்கள் ஏற்படுகிறது.

எனவே சர்க்கரை நோயாளிகளை ஆண்டிற்கு ஒரு முறை இந்த மூன்று உறுப்புக்களையும் அதன் செயல்பாடுகளை பரிசோதித்து அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் மதமதப்பு, உணர்ச்சியற்று போவது,புண் ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக கால் பாதங்களில் அடிப்பாகங்களில் புண் ஏற்பட்டு குணப்படுத்த முடியாமல் விரல்களை அகற்றுவது, அல்லது கால்யை அகற்றுவது பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே பாத பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த பொதுசுகாதாரத்துறை டாக்டர்களை அறிவுறுத்தியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள தொற்றா நோய் பிரிவில் ஏற்கெனவே கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது . நோயாளிகள் அந்த கண்ணாடியில் பாதங்களை பார்த்து அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வார்கள்.

தற்போது அனைத்து டாக்டர்களும், சிகிச்சைக்கு வரும் நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளின் பாதப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுச் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement