சிறப்புக்கூறு நிதி பயன்பாடு: முதல்வர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரி : ஆதிதிராவிடர் சிறப்புக் கூறு நிதியின் பயன்பாடுகள் குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு அரசு நடப்பாண்டில் ரூ.488 கோடி ஒதுக்கீடு செய்து, 20 துறைகள் மூலம் பல்வேறு நடத்திட்டங்களை செய்து வருகிறது. இந்த நிதி சரியாக செலவிடப்படுவதை உறுதிப்படுத்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் மாநில அளவிலான ஆதிதிராவிடர் வளர்ச்சிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சந்திரபிரியங்கா, வளர்ச்சி ஆணையர் ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே, அரசு செயலர்கள் ஜவஹர், முத்தம்மா, கேசவன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சிறப்புக் கூறு நிதியின் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்புக் கூறு நிதியை இந்த நிதியாண்டிற்குள் முறையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சென்றடையவும், மக்களின் வளர்ச்சி திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.