பெண்ணாடம் நகரில் மீண்டும் சங்கு ஒலிக்குமா?

பழுதான சங்கு ஒலிக்கும் இயந்திரத்தை சரி செய்து மீண்டும் பழையபடி சங்கு ஒலிக்கும் சத்தத்தை கேட்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் பேரூராட்சி, அக்ரஹார தெருவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சங்கு ஒலிக்கும் கோபுரம் உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வந்தனர்.

இதன் மூலம் நகர மக்களுக்கு நேரத்தை தெரியப்படுத்தும் விதமாக, தினசரி அதிகாலை 5:00 மணி, காலை 8:00 மணி, மதியம் 1:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 8:00 மணி என ஐந்து முறை சங்கு ஒலிக்கும்.

அந்த சத்தத்தை வைத்து பெண்ணாடம் நகர மக்கள் மட்டுமன்றி மாளிகைக்கோட்டம், திருமலை அகரம், பெ.கொல்லத்தங்குறிச்சி, பெ.பொன்னேரி, சவுந்திரசோழபுரம் சுற்றியுள்ள கிராம மக்களும் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதும், வெளியூர் சென்று வர நேரத்தை பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் பராமரிப்பின்றி சங்கு ஒலிக்கும் இயந்திரம் பழுதாகி, சத்தம் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது.

இதனால், சங்கு சத்தமின்றி, நேரத்தை கடைபிடிக்க முடியாமல், ஏதோ ஒன்றை இழந்ததை போன்று உணருவதாக நகர மக்களும், கிராமப்புற மக்களும் தெரிவிக்கின்றனர்.

பெண்ணாடம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சங்கு ஒலிக்கும் இயந்திரத்தை பழுது நீக்கம் செய்து மீண்டும் பழையபடி சங்கு ஒலிக்கும் சத்தத்தை கேட்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement