வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
கச்சிராயபாளையம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் குடிசைகளில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு புதிதாக சிமென்ட் வீடு கட்டுவதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 397 வீடுகள் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 22 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடக்கிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, வீடு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, பணி துவங்கிய காலம், கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, கள்ளக் குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, கனவு இல்ல திட்ட பதிவேடுகள், பணி ஒதுக்கீடு விவரம், பயனாளிகளின் விபரம், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் இருப்பு ஆகியவை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது பி.டி. ஓ.,க்கள் ஜோசப் ஆனந்தராஜ், சந்திரசேகரன், அலுவலக மேலாளர் ஷபி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.