வேலை வாங்கி தருவதாக மோசடி தாய், மகன் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி : வெளிநாட்டு வேலை அனுமதி பெற்று தருவதாக கூறி கன்சல்டன்சி உரிமையாளரிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், மோரீஸான் தோட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் மலங்கோ, 44; வெளிநாட்டு கல்வி தொடர்பாக ஆலோசனை மையம் நடத்தி வருகின்றார். இவரது நண்பர் லாஸ்பேட்டை அன்பரசன் மூலம் பெரிய காலாப்பட்டு வீரம்மாள் நகர், பிம்ஸ் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயா, 45; அவரது மகன் கமலேஷ், 22; ஆகியோர் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகமாகினர்.
அவர்கள் வெளிநாட்டிற்கு படிப்பு மற்றும் வேலை அனுமதியை குறைந்த செலவில் ஏற்பாடு செய்து தருவதாக, சதீஷ் மலங்கோவிடம் கூறினர். இதைநம்பி, சதீஷ் மலங்கோ 4 பேருக்கு, வெளிநாட்டிற்கான சுற்றுலா விசா மற்றும் வேலை அனுமதி பெற்று தருமாறு, பல தவணையாக ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை, கமலேஷ் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி வெளிநாட்டு வேலை அனுமதி மற்றும் சுற்றுலா விசா பெற்று தராமல் ஏமாற்றியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சதீஷ் மலங்கோ அளித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார், கோர்ட் உத்தரவின் பேரில் ஜெயா, அவரது மகன் கமலேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.