தாண்டிக்குடி மலைப்பகுதியில் நுாதனமாக திருடப்படும் 'அவகடா'
தாண்டிக்குடி,: தாண்டிக்குடி மலைப்பகுதியில் சமீபமாக அவகடா (வெண்ணெய் பழம்) நுாதனமாக திருடப்படும் செயல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பலரும் பாதிக்கின்றனர். இதனை போலீசார் கண்டுகொள்ளாததால் திருட்டு ஜோராக நடக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மித வெப்பமண்டல பகுதியில் விளைச்சல் காணும் 'அவகடா' துவக்கத்தில் காபிக்கு மத்தியில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது.
வெண்ணெய் பழம் என அழைக்கப்படும் இதில் ஏராளமான நுண்ணுாட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளதும், பேசியல் கிரீம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பால் இதற்கு நாடு முழுவதும் ஏக கிராக்கி நிலவ தொடங்கியது. துவக்கத்தில் பெங்களூரு, டெல்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்பட்டன.
தொடர்ந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் அனுப்பப்பட்டது. இவற்றின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்க தற்போது விலையும் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைச்சல் வெகுவாக பாதித்தால் துவக்கத்திலே கிலோ ரூ.200 விற்றது. தற்போது ரூ.300 வரை விலை போகிறது.
இதனால் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் அவகடா மரங்களில் உள்ள காய்களை நுாதனமாக திருடுகின்றனர்.
இம்மலைப் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஊடு பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள அவகடா காய்கள் நாள்தோறும் டன் கணக்கில் பட்டா நிலங்களில் மர்ம நபர்களால் மாயமாகுகிறது.
இவர்கள் சோலார் மின்வெலிகளை எளிதாக கையாள்வதற்கு பயிற்சி, இரவில் முதிர்ச்சியான காய்களை பறிப்பதற்கு நெத்தியில் ஒளிரும் விளக்குகள் என இரவு நேரங்களில் கைவரிசையை காட்டுகின்றனர்.
தாண்டிக்குடி,மங்களம் கொம்பு, கொடலங்காடு, பண்ணைக்காடு, பூலத்துார், கும்பரையூர், மச்சூர், பெருமாள்மலை, அடுக்கம்,ஆடலுார், பன்றிமலை உள்ளிட்ட கீழ் மழை பகுதிகளில் இவர்களின் கைவரிசை நீள்கிறது. திருட்டு காய்கள் என தெரிந்தும் விலை குறைவாக வாங்கி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும் கும்பல்களும் வாகனத்துடன் நடமாடுகின்றனர். உற்பத்தி செய்த விவசாயிகள் காய்களை பறிப்பதற்கு தோட்டத்திற்கு செல்லும் நிலையில் வருவாயை இழந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையே நீடிப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
ஒருபுறம் வனவிலங்கு நடமாட்டம், மறுபுறம் மர்ம நபர்களின் கைவரிசை என விவசாயிகள் இவ்வாண்டில் மட்டும் ரூ.கோடி கணக்கில் வருவாயை இழந்தனர்.
இதில் ஈடுபடும் மர்மநபர்கள் யாரும் கண்டறிய முடியாத படி நள்ளிரவில் செல்வதும், அதிகாலை 3:00மணி முதல் 5:00 மணி வரை திருட்டை தொடர்கின்றனர்.