சுகாதார நிலையம், பள்ளி அருகே கோழிக்கழிவு: தொற்றுநோய் அபாயம்
சாயல்குடி : -சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் கொட்டப்படும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் மாணவிகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வடக்குப்பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனைக்கு ஒதுக்கப்பட்ட 2.5 ஏக்கர் இடம் காலியாக உள்ளது. முன்பு அவ்விடத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. தற்போது கோழி, ஆடுகளின் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
இதுகுறித்த புகாரில் சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒவ்வொரு கோழிக்கடைகளுக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத சிலர் பிராய்லர் கோழி இறைச்சி கடைக்காரர்கள் அவ்விடத்தை தொடர்ந்து குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். கோழி கழிவுகளால் தொற்று ஏற்பட்டு அப்பகுதியில் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சுகாதார துறையும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுபவர் மீது அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.