வி.சி., மாவட்ட செயலரை கைது செய்ய பா.ம.க., மனு
விருத்தாசலம், : வி.சி., கட்சி மாவட்ட செயலரை கைது செய்ய கோரி, பா.ம.க., வினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், புவனகிரியில் நேற்று முன்தினம் வி.சி., கட்சி கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற வி.சி., மாவட்ட செயலாளர்கள் தமிழ் ஒளி, நீதிவள்ளல் ஆகியோர், மாநில வன்னியர் சங்க தலைவரை ஒருமையில் பேசி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுசம்பந்தமான வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியது.
இதுதொடர்பாக, பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பா.ம.க.,வினர் நேற்று விருத்தாசலம் டி.எஸ்.பி., மோகனிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதில், புவனகிரியில் நடந்த வி.சி., கட்சி கூட்டத்தில் மாவட்ட செயலர் நீதிவள்ளல், தமிழ் ஒளி, செல்வராணி ஆகியோர் மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், கலவரத்தை துாண்டும் வகையில் வன்னியர் சமுதாய மக்களை இழிவாக பேசியுள்ளனர்.
இதனால், இருசமுதாய மக்களிடையே சாதி கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஒருமையில் பேசிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநில இளைஞர் சங்க செயலர் சுரேஷ், முன்னாள் மாநில துணை பொது செயலர் திருஞானம். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், கவுன்சிலர் சரவணன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் செல்வக்கு உட்பட பலர் உடனிருந்தனர்.
பா.ம.க., வினர் புகார் அளிக்க திரண்டதால், டி.எஸ்.பி., மோகன் தலைமையில், 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.