தொடர் மழைக்கு நிரம்பும் கண்மாய், குளங்கள்
காரைக்குடி : காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குடிநீர் குளங்கள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த பல வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தவிர கடந்த மாதம், தமிழகத்திலேயே அதிகபட்சமாக காரைக்குடி பகுயில் 154 மி.மீ., மழை பதிவானது.
இதில், காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் முழுவதுமாக நிரம்பி வருகிறது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் ஆதாரமாக இன்றளவும் குளங்களே உள்ளன. தற்போது வரை கிராம மக்கள் இக்குளங்களில் இருந்தே குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.
தொடர் மழை காரணமாக, பல கிராமங்களில், மக்களின் குடிநீர் ஆதாரமான குடிநீர் குளங்களும், கோயில் தெப்பங்களும், கண்மாய்களும் முழுமையாக நிரம்பி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு பல கண்மாய்கள் குளங்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.