இளையான்குடி கண்மாய்க்கு வந்து சேர்ந்த வைகை தண்ணீர்

இளையான்குடி : தினமலர் செய்தி எதிரொலியாக இளையான்குடி,அதிகரை, அம்முக்குடி கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் செல்வதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மதுரையிலிருந்து செல்லும் வைகை ஆறு மானாமதுரை வழியாக பார்த்திபனூர் மதகணை சென்று பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்கிறது. இந்நிலையில் பார்த்திபனூர் மதகணையிலிருந்து இடது பிரதான கால்வாய் மூலம் இளையான்குடி பகுதிகளில் ஏராளமான கண்மாய்களுக்கும் வைகை நீர் சென்று வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கால்வாய்களிலும் வெள்ள நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இளையான்குடி பகுதி விவசாயத்திற்காக முள்ளியரேந்தல் கால்வாய் வழியாக இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக முள்ளியரேந்தல் கால்வாயிலிருந்து இளையான்குடி கண்மாய்க்கு பிரியும் இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஷட்டர்கள் கால்வாயைவிட மேடாக இருப்பதினால் கடந்த 2 வருடங்களாக கால்வாயில் தண்ணீர் வந்தும் கண்மாய்க்கு தண்ணீர் வராத காரணத்தினால் 600 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இளையான்குடி, அதிகரை, அம்முக்குடி கண்மாய்கள் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் அபுபக்கர் மற்றும் விவசாயிகளும் தெரிவித்ததை நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தியாக வெளிவந்தது.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்த்திபனூர் மதகு அணையின் இடதுபுற கால்வாயில் மேற்கண்ட 3 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கூடுதலாக தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுத்ததோடு மட்டுமில்லாமல் ஷட்டர் பகுதிகளிலும் சீரமைப்பு செய்தனர். நேற்று மதியம் முதல் மூன்று கண்மாய்களுக்கும் தண்ணீர் சென்று வருவதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement