வைகை ஆற்றில் பாதுகாப்பின்றி மீன்பிடிக்கும் மக்கள்
திருப்புவனம், : திருப்புவனம் பகுதியில், வைகை ஆற்றில் நீர்வரத்து உள்ள நிலையில் கிராம மக்கள் பலரும் ஆபத்தான முறையில் நின்று மீன் பிடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி பெய்து வருகிறது. மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றிலும் மழை நீர் வந்த வண்ணம் உள்ளது. வைகை ஆற்றில் பல இடங்களில் மணல் திருட்டு காரணமாக ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. ஆற்று நீரில் கெண்டை, கெளுத்தி, ஜிலேபி உள்ளிட்ட வகை மீன்கள் அடித்து வரப்படுகின்றன.
தடுப்பணைகள், கால்வாய் பிரியும் இடங்களில் மீன்கள் எதிர் திசையில் நீந்தும். இவ்வாறு துள்ளி குதிக்கும் மீன்களை பிடிக்க கிராம மக்கள் பலரும் கரைவலை, கொசுவலை, தூண்டில் ஆகியவற்றுடன் ஆற்றினுள் முகாமிட்டுள்ளனர். இதில் பல இடங்கள் ஆபத்தான வகையில் உள்ளன. வைகை ஆற்றின் நடுவே உள்ள பாறைகள், தடுப்புச்சுவர்கள், மணல் திட்டுகள் ஆகியவற்றில் கிராமமக்கள் இறங்கி நின்று மீன் பிடிக்கின்றனர்.
மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நீரில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அச்சம் உள்ளது. ஆபத்தான முறையில் மீன்பிடிப்பவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. கடந்த காலங்களில் மீன்பிடிக்க ஆற்றில் இறங்கியவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மிகுந்த சிரமப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆபத்தான முறையில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.