லோக் ஆயுக்தா ஏ.டி.ஜி.பி., புகார் குமாரசாமி, நிகில் மீது வழக்கு

பெங்களூரு: தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறி, மிரட்டல் விடுத்ததாக, லோக் ஆயுக்தா எஸ்.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., சந்திரசேகர் அளித்த புகார் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, லோக் ஆயுக்தா எஸ்.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., சந்திரசேகர் கடிதம் எழுதியிருந்தார். அதில், 'மத்திய அமைச்சர் குமாரசாமி முதல்வராக இருந்தபோது, சாய் மினரல்ஸ் நிறுவனத்துக்கு விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த கடிதம், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த குமாரசாமி, 'என்னை ஒருமுறையாவது சிறையில் அடைக்க அவர் துடிக்கிறார். அவருக்கு பின்னால் யார் உள்ளார்?' என்று கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து தனது துறை ஊழியர்களுக்கு, சந்திரசேகர் எழுதிய கடிதத்தில், ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் வாக்கியத்தை குறிப்பிட்டு, குமாரசாமியை பன்றியுடன் ஒப்பிட்டிருந்தார். தொடர்ந்து, சஞ்சய் நகர் போலீசில், அக்., 11ல் சந்திரசேகர் புகார் அளித்திருந்தார்.

மிரட்டல்



அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமாரசாமியும், அவரது மகன் நிகிலும் தவறான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்து, நான் கர்நாடகா கேடரில் தொடர்வதாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர். கர்நாடகா கேடரில் இருந்து என்னை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதாக, குமாரசாமி வாய்மொழியாக மிரட்டினார்.

அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் பாபு, அரசு தலைமைச் செயலரிடம் என் மீது பொய் புகார் அளித்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மீது போலீசார், சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதை எதிர்த்து, நகரின் 42வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில், ஏ.டி.ஜி.பி., சந்திரசேகர் வழக்கு தொடர்ந்தார்.

அனுமதி



இம்மனு மீதான விசாரணை, மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, எஸ்.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., புகாரின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முதல் எதிரியாக குமாரசாமியும், இரண்டாவது எதிரியாக நிகில் குமாரசாமியும் மூன்றாவது எதிரியாக சுரேஷ் பாபுவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

'நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளதால், அதிகாரி அளித்த புகாரின்படி விசாரணை நடத்துவோம். சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கி, வாக்குமூலம் பதிவு செய்வோம்' என மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Advertisement