இளம் வீரர்களுக்கு பாராட்டு * என்ன சொல்கிறார் கும்ளே

மும்பை: ''உள்ளூர் போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இவர்களுக்கு தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு தர வேண்டும்,'' என கும்ளே தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில், நவ. 8ல் நடக்க உள்ளது. அடுத்து ஜிகுபெர்ஹா (10), செஞ்சுரியன் (13), ஜோகனஸ்பர்க்கில் (15) போட்டி நடக்க உள்ளன.
இதற்கான இந்திய அணி குறித்து சுழல் ஜாம்பவான் கும்ளே கூறியது:
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் யாஷ் தயாள், வைஷாக் விஜய்குமார், ராமன்தீப் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் யாஷ் தயாள் ஓவரில், ரிங்கு சிங் தொடர்ந்து ஐந்து சிக்சர் அடித்தார். இதன் பின் மனம் தளராத யாஷ் தயாள், வலிமையாக மீண்டு வந்துள்ளார்.
கர்நாடக அணிக்காக வைஷாக், பல்வேறு போட்டிகளில் அசத்தியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியில் இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும், இவரை தக்கவைக்காதது வியப்பாக இருந்தது.
அதேபோல ராமன்தீப் சிங், மிடில் ஆர்டரில் மிரட்டுவார். கடைசி 3 அல்லது 4 பந்து கிடைத்தால் கூட போதும், ரன் விளாசுவார். துடிப்பான பீல்டரான இவர், தேவைப்பட்டால் பவுலிங்கும் செய்வார்.
நாளை துவங்கும் தென் ஆப்ரிக்க தொடரில், இந்த இளம் வீரர்களுக்கு களமிறங்கும் லெவன் அணியில் வாய்ப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement