கூட்டுறவு பணியாளர்களுக்கு நாளை குறை தீர்வு முகாம்
கூட்டுறவு பணியாளர்களுக்கு
நாளை குறை தீர்வு முகாம்
சேலம், நவ. 7-
கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண, இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சேலம் மண்டல அளவில், முதல், இரண்டாவது, 'பணியாளர் நாள் நிகழ்ச்சி' முறையே, ஜூலை, 12, செப்., 13ல் நடந்தது. அதில், 251 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.
தற்போது மூன்றாவது, 'பணியாளர் நாள் நிகழ்ச்சி' நாளை காலை, 10:30 மணிக்கு, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அழகாபுரத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடக்க உள்ளது. அதில் சேலம் மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர்/பணியில் இருந்து விடுவிக்கப்பட்டோர், குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம். மேலும் பெறப்படும் விண்ணப்பங்கள், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசாணை, பதிவாளர் கடிதங்கள், சுற்றறிக்கைக்கு உட்பட்டு உடனே தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சேலம் மண்டல இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.