பார்லிமென்ட் கமிட்டி இன்று கர்நாடகா வருகை

பெங்களூரு: கர்நாடகாவில் வக்பு சொத்து விஷயம் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது. இது தொடர்பாக, ஆய்வு செய்ய பார்லிமென்ட் இணை கமிட்டியினர், இன்று கர்நாடகாவுக்கு வருகை தருகின்றனர்.


கர்நாடகாவில் வக்பு வாரிய சொத்து விவகாரம், நாளுக்கு நாள் சூடு பிடித்துள்ளது. பல்வேறு விவசாயிகளின் நிலங்கள், மடங்கள், கோவில்களின் சொத்துகள், வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை. அவற்றை விட்டுத்தரும்படி வாரியம் நோட்டீஸ் அனுப்புவது, சர்ச்சைக்கு காரணமானது. விவசாயிகள், எதிர்க்கட்சியினர் அதிருப்தி தெரிவித்து, போராட்டமும் நடத்தினர்.


இதற்கிடையே, மத்திய அரசு வகுத்துள்ள வக்பு திருத்த மசோதா - 2024க்கு, எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, கருத்து சேகரிக்க ஜெகதாம்பிகா பால் தலைமையில், பார்லிமென்ட் இணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினர் இன்று விஜயபுரா மற்றும் தார்வாட் மாவட்டங்களுக்கு வருகின்றனர். விவசாயிகள் நிலங்களை வக்பு சொத்து என, ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது குறித்து, விவசாயிகளின் பிரச்னைகளை கேட்டறிவர்.


பல்வேறு மடங்கள், சங்க, அமைப்புகளும், தங்கள் ஆட்சேபனைகளை பார்லிமென்ட் இணை கமிட்டியிடம் தெரிவிப்பர். அனைவரின் கருத்துகளை கேட்டறிந்து, கமிட்டி அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம், விரிவான அறிக்கை அளிக்கும்.

Advertisement