பெங்களூரு 'பிசினஸ் காரிடார்'; ரூ.27,000 கோடி வழங்கும் 'ஹட்கோ'

பெங்களூரு: பெங்களூரு புறநகரில், போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, 'பெங்களூரு பிசினஸ் காரிடார்' அமைக்க, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் திட்டமிட்டது. நிலம் கையகப்படுத்துவதில், பிரச்னை ஏற்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திட்டத்தை செயல்படுத்த, பி.டி.ஏ., தயாராகி வருகிறது.



இது தொடர்பாக, பி.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை: 'பெங்களூரு பிசினஸ் காரிடார்' திட்டத்தை செயல்படுத்த, வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சி வாரியமான, 'ஹட்கோ' நிறுவனம் 9 சதவீதம் வட்டியில், 27,000 கோடி ரூபாய் கடன் வழங்க சம்மதித்துள்ளது. இதற்காக மாநில அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. வட்டியை குறைப்பது குறித்து, பேச்சு நடத்தப்படுகிறது.


திட்டத்துக்கு 2,600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 200 ஏக்கர் அரசு நிலமாகும். நிலம் பி.டி.ஏ., வசம் கைமாற்றப்பட்டது. மற்ற நிலங்கள் விவசாயிகளிடம், நில உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களுக்கு திருப்திகரமான நிவாரணம் வழங்கி, நிலம் கையகப்படுத்தப்படும்.


நிலத்தை கையகப்படுத்தும் பணிக்காக, எட்டு கே.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது. ஆறு மாதங்களில் டெண்டர் அழைக்கப்படும். மூன்று ஆண்டுகளில் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம். திட்டத்தை செயல்படுத்த, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் அதீக் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு பிசினஸ் காரிடாரில், இரண்டு ஓரங்களிலும், வர்த்தக நோக்கத்துக்கு நிலம் வழங்க திட்டமிட்டுள்ளோம். திட்ட செலவில், 60 சதவீதம் பணம், நிலம் கையகப்படுத்த தேவைப்படும். எனவே சுங்க வரியால் மட்டும், கடனை அடைக்க முடியாது. எனவே காரிடாரின் இரண்டு ஓரத்திலும் நிலம் விற்கப்படும்.


துமகூரு சாலையின், மாதநாயகனஹள்ளியின், நைஸ் ஜங்ஷன் அருகில் துவங்கும் பிசினஸ் காரிடார், ஹெசரகட்டா சாலை, தொட்டபல்லாபூர் சாலை, பல்லாரி சாலை, ஹென்னுார் சாலை, பழைய மெட்ராஸ் சாலை, ஒயிட்பீல்டு, சன்னசந்திரா, சர்ஜாபுரா சாலை வழியாக, ஓசூர் சாலையை அடையும். ரயில்வே லெவல் கிராசிங், 395 சிறிய ஜங்ஷன்கள் இருக்கும்.



திருமேனஹள்ளி ஏரி, சின்னகானஹள்ளி ஏரி, குஞ்சூர் ஏரி, சிக்க ஜாஜூர் ஏரிகள் மீது உட்பட, மொத்தம் 16 மேம்பாலங்கள் கட்டும் திட்டம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement