துங்கபத்ரா அணை ஷட்டர் கதவுகள் மாற்றம்: அதிகாரிகள் ஆய்வு

பெங்களூரு: கடந்த 70 ஆண்டுகள் பழமையான, துங்கபத்ரா அணைக்கு புதிய ஷட்டர் கதவுகள் பொருத்த, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.



கொப்பாலின், முனிராபாத் அருகில் துங்கபத்ரா அணை உள்ளது. இது கர்நாடகாவின், மிக பழமையான அணைகளில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன், அணையின் ஷட்டர் கதவு முறிந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால், இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எந்த அணையின் கதவுகள் என்றாலும், 50 ஆண்டுகள் கடந்தால் அவற்றை மாற்ற வேண்டும்.


ஆனால் 70 ஆண்டுகளாகியும், அணையின் கதவுகள் மாற்றப்படவில்லை. கொள்ளை நடந்த பின், கோட்டை வாசலை மூடுவது போன்று, ஷட்டர் உடைந்து, அசம்பாவிதம் நடந்து மக்களின் அதிருப்திக்கு ஆளான பின், துங்கபத்ரா அணை கதவுகளை மாற்றிவிட்டு, புதிய கதவுகள் பொருத்த துங்கபத்ரா அணை வாரியம் திட்டமிட்டுள்ளது.

துங்கபத்ரா அணை வாரிய அதிகாரிகள், அணைக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். எந்த விதமான கதவுகள் பொருத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கின்றனர். கோடைக் காலத்தில் நீர்மட்டம் குறையும். அப்போது புதிய கதவுகள் பொருத்த முடிவு செய்துள்ளனர்.

நீர்ப்பாசன வல்லுனர்கள் கூறியதாவது:

துங்கபத்ரா அணை, கர்நாடகாவின் நான்கு மாவட்டங்கள், தெலுங்கானா, ஆந்திராவின் லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாடியாக உள்ளது.

குடிநீருக்கும், விவசாயத்துக்கும் துங்கபத்ராவை நம்பியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இரவு, அணையின் 19வது ஷட்டர் கதவுகள் உடைந்ததால், 30க்கும் மேற்பட்ட டி.எம்.சி., தண்ணீர் வீணானது. மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது.

அணையின் செயின் லிங்குகளை மாற்றாததே, இதற்கு காரணம். 70 ஆண்டுகள் பழமையான அணையின் கதவுகள், ஒரு முறை கூட மாற்றப்படவில்லை. உடனடியாக மாற்றும்படி வல்லுனர்கள் ஆலோசனை கூறியும், அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement