மண மணக்கும் பூக்கள் சாகுபடியில் அசத்தும் குலசேகரநல்லுார்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லூர் மண மணக்கும் பூக்கள் சாகுபடியில் அசத்தி வருகிறது.

அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை பூவிற்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் இந்த பகுதியில் மல்லிகை தோட்டங்களால் சூழப்பட்டிருந்தது.

எங்கு பார்த்தாலும் மல்லிகை அரும்புகள் காணப்பட்டதால் அருப்புக்கோட்டையை அருப்புக்கோட்டை எனக்கூறி வந்ததாக வரலாறு உள்ளது.

அருப்புக்கோட்டையை சுற்றி தற்போதும் தோட்டங்களில் பூக்கள் சாகுபடியை விவசாயிகள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.

அதிலும் அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லூர் கிராமத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பூக்களின் விவசாயம் தான் அதிகமாக உள்ளது.

இங்கு மல்லிகை பூ, முல்லை, ரோஜா, சம்மங்கி, பட்டன் ரோஸ், கேந்தி பூ, கோழி கொண்டை பூ, கனகாம்பரம் உட்பட விதவிதமான பூக்கள் விளைவிக்கப்படுகின்றன.

பாரம்பரியமாக இங்குள்ள விவசாயிகள் இதை செய்து வருகின்றனர்.

கிராமத்தைச் சுற்றி உள்ள மடத்துப்பட்டி, கண்டமங்கலம், குருணைகுளம், சித்தலக்குண்டு, தமிழ்பாடி, செம்பட்டி, புலியூரான் உட்பட கிராமங்களிலும் பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, கூலி உயர்வு, உரங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தாலும் விடாமல் பூக்கள் சாகுபடியை செய்து வருகின்றனர்.

தினமும் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட் பூக்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கிச் செல்வர்.

சீசன் நேரங்களில் மல்லிகைப்பூ வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

பல்வேறு வகையான பூக்கள் இங்கு விளைவதால் இந்தப் பகுதியில் ஒரு அரசு சென்ட் பேக்டரி அமைந்தால் தொழில் மேம்படும் என்பது பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

Advertisement