காலை நேரங்களில் அணிவகுத்து நிற்கும் ஆம்னி பஸ்களால் விபத்து அபாயம்
விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே காலை நேரங்களில் அணிவகுத்து நிற்கும் ஆம்னி பஸ்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அரசு போக்குவரத்து பணிமனையின் முன்பு புறநகர் பஸ்கள், ஆம்னி பஸ்கள் நிறுத்தம் கிடையாது. விருதுநகர் என்றால் கலெக்டர் அலுவலக நிறுத்தம் தான் என புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கிய பின்பும் திருநெல்வேலி, நாகர்கோவில் போக்குவரத்து கழக பஸ்கள் அடித்து கூறுகின்றனர்.
இந்நிலையில் சென்னை, பெங்களூருவில் இருந்து தினசரி புறப்படும் ஆம்னி பஸ்கள் காலை நேரங்களில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் போக்குவரதுக்கு கழக பணிமனையின் முன் 6:00 மணி முதல் 7:00 மணி வரை நிறுத்துகின்றனர். விருதுநகரை சேர்ந்த பயணிகளுக்கு இது பக்கமாக உள்ளது.
அதே நேரம் இவ்வாறு அணிவகுத்து நிறுத்தப்படும் ஆம்னி பஸ்களால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இது போன்று நிறுத்தப்பட்டிருந்த எஸ்.இ.டி.சி., பஸ் பின்புறம் கார் மோதியதில் நால்வர் சம்பவ இடத்தில் பலியாகினர். தற்போது எஸ்.இ.டி.சி., பஸ்களை விட ஆம்னி பஸ்கள் பெருகி விட்டன.
திருநெல்வேலி, மதுரை போன்ற பெருநகரங்களில் ஆம்னி பஸ் ஸ்டாண்டுகளே செயல்படுகின்றன. விருதுநகரில் தற்போது வரை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லை. சிவகாசி, விருதுநகர் ஆகிய இருபகுதிகளில் இருந்தும் அதிகளவில் ஏறுகின்றனர்.
இந்த பஸ்கள் விருதுநகர் போக்குவரத்து பணிமனை நிறுத்தத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அணிவகுத்து நின்று அடுத்தடுத்து பயணிகளை இறக்குகின்றனர். ஏற்கனவே எதிர்புறம் லெட்சுமி நகர் பகுதி சர்வீஸ் ரோட்டில் மணிக்கணக்கில் இரவு நேரங்களில் ஆம்னி பஸ்களை நிறுத்தி ஏற்றி அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதே போல் காலை நேரத்தில் இங்கு நிறுத்துவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. லாரியும் இதே பகுதியில் தான் வருகிறது. இதனால் பாதிப்பு தான்.
இதை மாற்றி ஆம்னி பஸ்களை விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல ஏற்பாடு செய்தால் பயணிகளுக்கு தேவையான வசதியும் கிடைக்கும். போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் குறையும்.