அறிவியல் துளிகள்
1. தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில், 1.2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பறவையின் தொல்லெச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6.6 அடி உயரம் வளரும் இப்பறவை, 70 கிலோ எடை கொண்டிருந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
2. கொசுத்தேனீ என்று அழைக்கப்படும் கொடுக்கற்ற தேனீக்கள் சேகரிக்கும் தேனானது பல் ஆரோக்கியம், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் என்று குயின்ஸ்லாந்து பல்கலை கண்டறிந்துள்ளது.
3. புவி வெப்ப மயமாதல் என்பது மனித குலத்திற்கு மட்டுமன்றி எல்லா உயிர்களுக்குமே அச்சுறுத்தலாக உள்ளது. மனித நடவடிக்கைகளால் வெளியிடப்படும் வெப்பத்தில், 9-0 சதவீதத்தைக் கடல் உள்வாங்கிக் கொள்கிறது. இதுவரை, 500 மீ., ஆழமுள்ள கடலின் மேற்பரப்பு மட்டும் தான் வெப்பத்தை உறிஞ்சிக் கொள்ளும் என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், புவி வெப்பம் அதிகமாகிப் பனிப்பாறைகள் உருகத் துவங்கியதில் இருந்து, ஆழ்கடலும் கூட வெப்பத்தை உள்வாங்கிக் கொள்வது தெரியவந்துள்ளது.
4. இன்று, இதய நோய்கள் பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மாரடைப்பு ஏற்பட்ட பிறகு இதயம் பலவீனமடைகிறது, இதயத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. நம் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் ஒருவித புரதம் 'ஜிபிஎன்எம்பி'. இது இதயத் திசுக்களை வலிமையாக்குவதாக அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை கண்டறிந்துள்ளது. எலிகளில் மேற்கொண்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியளவில் மருந்து மாத்திரை தேவைப்படாமல் இதயத் திசுக்களைச் சரிசெய்ய, இயற்கையான வழியாக இந்தப் புரதம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.