அதிகாரிகள், ஐகோர்ட்டை ஏமாற்றிய கிரஷர் ஆலை!

2

கருப்பட்டி காபியை ருசித்தபடியே, “பிரமாண்டமான பங்களா தேடுதாருவே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.


“திருநெல்வேலி மாவட்டத்துக்கு அமைச்சர் இல்லேல்லா... முதல்ல ராஜ கண்ணப்பன், அடுத்து தங்கம் தென்னரசுன்னு பொறுப்பு அமைச்சர்கள் இருந்தாவ வே...


“நெல்லை கட்சியினரின் தொல்லையை அவங்களால சமாளிக்க முடியாததால, சீனியரான நேருவை, இப்பபொறுப்பா போட்டிருக்காவ... இவர், அடிக்கடி வந்துட்டு போகணும்கிறதால, நெல்லையில பிரமாண்ட பங்களா தேடுதாரு... தன்னுடன், ஆதரவாளர் பட்டாளமே வரும்கிறதால, ஏழெட்டு பெட்ரூமா இருக்கிற பங்களாவா பாக்காரு வே...


“இதுக்கு இடையில,நெல்லை மாநகராட்சியில் என்ன தான் மேயரை மாத்திட்டாலும், கவுன்சிலர்களை இன்னும் திருப்திபடுத்த முடியல... தி.மு.க.,வுல இருந்து நீக்கப்பட்ட ஒரு கவுன்சிலர், குப்பை கழிவுகள் பிரச்னைக்காக சமீபத்துல விளக்குமாறோட மன்ற கூட்டத்துக்கு வந்துட்டாருவே...

“அவரை சமாளிக்க முடியாம, புதிய மேயர் ராமகிருஷ்ணன், பத்தே நிமிஷத்துல கூட்டத்தை முடிச்சிட்டு பறந்துட்டாரு...நேரு என்ன தான் நெல்லையிலயே டேரா போட்டாலும், மாநகராட்சிபஞ்சாயத்தை தீர்க்க முடியுமான்னு தெரியல வே...'' என்றார், அண்ணாச்சி.


“என்.ஓ.சி.,க்கு வசூல் வேட்டை நடத்தறா ஓய்...”என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...


“வீட்டுவசதி வாரியத்தின் எதிர்கால பயன்பாட்டுக்கான நிலங்களை பட்டியல் போட்டு வச்சிருந்தா... இதுல சில நிலங்களை கையகப்படுத்த, உரிமையாளர்களுக்கு நோட்டீசும் குடுத்திருந்தா ஓய்...


“ஆனா, பல இடங்கள்ல தொடர் நடவடிக்கை எடுக்காததால, அந்த நிலங்கள்ல, உரிமையாளர்கள் வீடுகளை கட்டிட்டா... 'இதுக்கு மேல, அந்த நிலங்களை கையகப்படுத்தறது சாத்தியமில்லை' என்ற முடிவுக்கு வந்த வாரியம், அந்த நிலங்களை விடுவிக்க முடிவு பண்ணிடுத்து...


“இதன்படி, 'நில உரிமையாளர்கள், தங்களது அசல் ஆவணங்களைகாட்டி, அந்தந்த கோட்டங்கள்ல, தடையின்மை சான்றிதழ் பெறலாம்'னு வாரியம் அறிவிச்சிருக்கு... இதுல, கோவை கோட்டத்துல, ஒவ்வொரு நிலத்துக்கும் என்.ஓ.சி., வழங்க, புரோக்கர்கள் வாயிலா, 2 லட்சம் ரூபாய் கறாரா வசூல் பண்றா ஓய்...” என்றார்,குப்பண்ணா.

“ஐகோர்ட்டையும், அதிகாரிகளையும் ஏமாத்திட்டாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...


“திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், மைவாடிநரசிங்காபுரம் கிராமத்தில், தனியார் கிரஷர் தொழிற்சாலை இருக்கு... பி.ஏ.பி.,கால்வாய்க்கு பக்கத்துல உள்ள பெரிய கிணற்றுலஇருந்து, கிரஷர் தொழிற்சாலைக்கு, தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரைதிருடி பயன்படுத்திட்டு இருந்தாங்க...


“போன வருஷம் இதைஅதிகாரிகள் கண்டுபிடிச்சு, கிரஷர் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிச்சுட்டாங்க... உடனே, கிரஷர் ஆலை தரப்பு, அந்த கிணறு மீது சினிமா செட்டிங் மாதிரி, அட்டை, தார்பாலின் போட்டு மூடிடுச்சுங்க...

“கிணற்றை மூடிட்டதா ஐகோர்ட்ல தெரிவிச்சு, மாவட்ட கலெக்டரிடமும் அறிக்கை வாங்கி, மறுபடியும் மின் இணைப்பை வாங்கிடுச்சுங்க... சில வாரங்களுக்கு பிறகு, சினிமா செட்டிங்கை பிரிச்சுட்டு, மறுபடியும் கிணற்று நீரை எடுத்து ஆலையை இயக்குறாங்க... உள்ளூர் அமைச்சர் பெயரை பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டுறதால, அவங்களும் ஒதுங்கி போயிடுறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி. பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் அமைதியானது.

Advertisement