மது இல்லாத திருமணத்துக்கு ஹிமாச்சல் கிராமத்தில் கவுரவம்

1

ஹமிர்பூர்: ஹிமாச்சல பிரதேசத்தில், மது விருந்து இல்லாமல் திருமண விழா நடத்தும் குடும்பங்களை கவுரவிக்க கிராம பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது.

ஹிமாச்சலின் ஹமிர்பூர் மாவட்டத்தில், லம்ப்லு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்தை சேர்ந்த தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மது, புகையிலை மற்றும் பிற போதை பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தங்கள் கிராமத்தில் இவற்றை முற்றிலுமாக ஒழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.



இதன் காரணமாக கிராமத்தில் புகையிலை பயன்படுத்துவோர் மற்றும் மது அருந்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கிராம பஞ்சாயத்து கூட்டம் தலைவர் கர்தார் சிங் சவுகான் தலைமையில் நடந்தது.

அதில், கிராமத்தில் மது விருந்து இல்லாமல் திருமண ஏற்பாடு செய்யும் குடும்பங்களை கவுரவிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கிராம பஞ்சாயத்திற்குள் வரும் வீடு அல்லது கடைகளை வாடகை விடும் உரிமையாளர்கள் பஞ்சாயத்துக்கு 20 சதவீத வரி கட்ட வேண்டும் மற்றும் வாடகைதாரர்கள் மது மற்றும் பிற போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement