நீரைத் தூய்மையாக்கும் எளிய இயந்திரம்

இந்த உலகில் தண்ணீருக்குப் பற்றாக்குறை என்பதே இல்லை. ஆனால், சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் பூமியில் கிடைக்கும் அதிகளவு நீர், உப்பு நீராக இருப்பது, நல்ல நீர், ஆறு, ஏரி, குளங்களில் கிடைக்கிறது. இவையும் கடுமையாக மாசடைந்து வருவதால் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான நீர் என்பது, கானல் நீராக இருக்கிறது.

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீர் நிலைகளில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான நீரைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கி இருக்கின்றனர். இதை உருவாக்க, பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்படும் சாதாரண டயர்கள் போதும். அதற்கு மேலே குடை போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். உள்ளே இருக்கும் சில இயந்திரப் பொறிகள் சூரியனிடம் இருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை சூடாக்குகின்றன.

நீர் சூடாகி, ஆவியாகி, குடை போன்ற அமைப்பின் மீது பட்டு மறுபடியும் நீராக மாறும். இந்த நீர் தனியாக ஒரு பையில் சேமிக்கப்படும். நீர் ஆவியாகி மறுபடியும் நீராக மாறும்போது, அதில் உள்ள மாசுகள் அகற்றப்பட்டுவிடும் என்பது தான் இந்த இயந்திரம் இயங்குவதற்கான மிக அடிப்படையான விதி.

இந்த எளிய இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு நாளுக்கு, 3.67 லிட்டர் நல்ல நீரைப் பிரித்தெடுக்க முடியும். மிகக் குறைந்த செலவில் வடிவமைக்கக் கூடியது என்பதால், இது உலகம் முழுக்க நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement