வெள்ளை மாளிகைக்கு வாங்க; அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்புக்கு பைடன் வாழ்த்து!
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறும் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். தேர்தல் முடிவுகள் குறித்து, ஜோ பைடன் நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
ஜோ பைடன் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். நாட்டை ஒன்றிணைக்க உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கமலா தொடர்ந்து போராடுவார்!
சமூகவலைதளத்தில், ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், ' கமலா ஹாரிஸ் நேர்மையும், தைரியமும் மிக்கவர். அசாதாரண சூழலிலும் அவர் ஒரு வரலாற்றுப் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதே உறுதி, மகிழ்ச்சியுடன் தொடர்ந்து போராடுவார். நான் முன்பே கூறியது போல், 2020ல் நான் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட போது, கமலாவை துணை அதிபராக, தேர்ந்தெடுத்தது தான் நான் எடுத்த முதல் முடிவு. இது நான் எடுத்த சிறந்த முடிவு.
சாம்பியன்
கமலா ஹாரிஸ் உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் சண்டையைத் தொடர்வாள். அவர் தொடர்ந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சாம்பியனாக இருப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் அமெரிக்காவின் எதிர்காலத்தில் தனது முத்திரையைப் பதிக்கும்போது, வருங்கால தலைமுறைகள் எதிர்பார்க்கும் ஒரு தலைவராக தொடர்ந்து இருப்பார்' என குறிப்பிட்டுள்ளார்.