நுண் நெகிழிகளால் இப்படி ஓர் ஆபத்தா?

நெகிழிகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம். இந்த நெகிழிகள் உடைந்து நுண் நெகிழிகளாக மாறுகின்றன. இவை, 0.001 மில்லி மீட்டருக்கும் குறைவான நெகிழித் துகள்கள், நுண் நெகிழிகள் என்று அழைக்கப்படுகின்றன; நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. உணவு, தண்ணீர், சுவாசம், ஏன் நம் தோல் வழியாகக் கூட உடலுக்குள் நுழையலாம். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த வியன்னா பல்கலை மேற்கொண்ட ஆய்வில் நுண் நெகிழிகள் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நம் உடலுக்குள் செல்லும் நுண் நெகிழிகள், உடலின் சில பாகங்களில் அப்படியே தங்கி விடுகின்றன. பாக்டீரியா, வைரஸ் அல்லது வேறு கிருமிகளால் நோய்கள் ஏற்படும் போது அந்தக் கிருமிகளைக் கொல்வதற்காக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம்.

அப்படியான மருந்துகளை இந்த நுண் நெகிழிகள் உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே, அந்தக் கிருமிகள் கொல்லப்படாமல் சுதந்திரமாகப் பெருகுகின்றன. இதனால் நோயின் பாதிப்பு அதிகமாகும். அதுபோல நாம் உட்கொண்ட மருந்தை எதிர்க்கும் வல்லமையையும் அந்தக் கிருமிகள் வளர்த்துக் கொள்கின்றன. வருங்காலத்தில்இது மிகப்பெரிய அபாயமாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். நுண் நெகிழி மாசைக் கட்டுப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

Advertisement