அரசுப் பணிக்கான விதிகளை இடையில் மாற்ற முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

4

புதுடில்லி: '' அரசு பணிக்கான விதிகளை இடையில் மாற்றக்கூடாது,'' என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்மா, பங்கஜ் மிதல் மற்றும் மினோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதன் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசு பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு முறை அதற்கான விளம்பரங்கள் துவங்கி காலி பணியிடங்களை நிரப்புவதில் முடிவு பெறுகிறது. ஏற்கனவே இருக்கும் விதிகள் அனுமதிக்காத வரை ஆட்சேர்ப்பு தகுதிகளுக்கான விதிகளை பாதியில் மாற்ற முடியாது.
ஒரு வேளை விதிகள் அவ்வாறு செய்வதற்கு அனுமதி அளித்து இருந்தாலும், அது தன்னிச்சையானதாக இருக்கக்கூடாது. அது சட்ட விதிகள் 14 (சமத்துவம்) மற்றும் பிரிவு 16( அரசுப் பணியில் பாகுபாடு காட்டாமை) ஆகிய விதிகளுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெறுவது மட்டும், ஒருவருக்கு வேலைவாய்ப்பிற்கான முழு உரிமையை வழங்கிவிடாது.இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வழக்கின் பின்னணி



ராஜஸ்தான் ஐகோர்ட்டில் காலியாக இருந்த 13 மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்பும் பணியில் முதலில் எழுத்துத்தேர்வும் பிறகு நேர்முகத் தேர்வும் நடந்தது. இதில் 21 பேர் பங்கேற்ற நிலையில் 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக ஐகோர்ட் அறிவித்தது. இதற்கு, 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது தெரியவந்தது. ஆனால், இந்த 75 சதவீத மதிப்பெண் என்ற தகுதி, பணி நியமனத்திற்கான அறிவிப்பின் போது கூறப்படவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement