அரசியலில் வயது முக்கியமல்ல: கட்சிக்குள் சர்ச்சை கிளப்பிய திரிணமுல் காங்., எம்.பி.,
கோல்கட்டா: அரசியலில் வயது முக்கியம் அல்ல. மக்களின் ஆதரவு தான் தேவை என திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, திரிணமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, பணித்திறன் மற்றும் உற்பத்தித்திறன் சரிவைக் காரணம் காட்டி, அரசியலில் ஓய்வு பெறும் வயதை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
கட்சிக்குள் வயது காரணமாக, அரசியல்வாதிகள் ஓய்வு பெற வேண்டும் என்ற விவாதம் நடந்து வரும் நிலையில், திரிணமுல் காங்கிரஸின் சேரம்பூர் எம்.பி., கல்யாண் பானர்ஜி, கூறியது, கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் கல்யாண் பானர்ஜி கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகிறார். அவருக்கு வயது 78 . மக்கள் ஆதரவு இருந்ததால், அவருக்கு இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது.டிரம்பின் தேர்தல் அரசியலில், வயது ஒரு பிரச்னையில்லை என்பதை இந்த வெற்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் வயது முக்கியமல்ல, நாட்டு மக்களுக்காக உழைக்கக்கூடியவராகவும், அனைத்துப் பணிகளையும் ஆற்றக்கூடியவராகவும் இருந்தால், மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால், அரசியலில் நீடிக்க முடியும். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லுவேன். நான் பேசியதற்கு கட்சியினர் வெளியே போக சொன்னால், எந்த சர்ச்சையிலும் சிக்காமல் சென்று விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.