இந்திய ஹாக்கி '100' * கொண்டாடும் ரசிகர்கள்

புதுடில்லி: இந்திய ஹாக்கி நுாறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஒலிம்பிக்கில் 8 தங்கம் உட்பட பல்வேறு சாதனை படைத்துள்ளது. அணியின் வெற்றி வரலாற்றை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் தேசிய விளையாட்டு அமைப்பு இது. தனது முதல் ஒலிம்பிக்கில் (1928, ஆம்ஸ்டர்டாம்) பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது.
புல்தரை மைதானங்களில் அசத்திய இந்தியா, அடுத்து செயற்கை இழை ஆடுகளங்களில் தடுமாறியது. கடந்த 10 ஆண்டுகளில் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. 41 ஆண்டுக்குப் பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) வெண்கலம் கைப்பற்றியது.
தொடர்ந்து பாரிசில் (2024) வெண்கலம் வசப்படுத்திய இந்தியா, ஒலிம்பிக் ஹாக்கியில் 52 ஆண்டுக்குப் பின் தொடர்ந்து இரண்டு வெண்கலம் (2021, 2024) வென்றது. முன்னதாக 1968, 1972 என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தது. தவிர இந்திய பெண்கள் அணியும் டோக்கியோ (2021) ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்தது. கடந்த 99 ஆண்டு வரலாற்றில், இந்திய ஆண்கள் அணி, ஒலிம்பிக்கில் 8 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் வென்றது. 1975ல் உலக கோப்பை (மலேசியா) வென்றது.
புதிய சகாப்தம்
தற்போது நுாற்றாண்டு கொண்டாட்டத்தை துவங்கியுள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு புதிய தொடர்கள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஹாக்கி இந்தியா லீக் தொடர், மீண்டும் நடக்க உள்ளது. டிச. 28ல் துவங்கும் இதில் 8 ஆண்கள் அணிகள் பங்கேற்கின்றன. முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் துவங்கப்பட உள்ளது. இதில் 4 அணிகள் களமிறங்க உள்ளன. இத்தொடருக்காக அடுத்த 10 ஆண்டுக்கு ரூ. 3,640 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வளர்ந்த கட்டமைப்பு
இந்திய மண்ணில் ஹாக்கி போட்டிக்கு தேவையான கட்டமைப்பு நாடு முழுவதும் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் குறித்த விபரத்தை தெரிந்து கொள்வது, வீரர்கள் 'ஆன்லைனில்' பதிவு செய்வது, போதுமான பயிற்சி வசதி உள்ளிட்ட விஷயங்களில் பல மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
சமமான பரிசு
அனைவரும் சமம் என்பதை தெரிவிக்கும் வகையில், எச்.ஐ., சார்பில் வீரர்கள், வீராங்கனை என இருவித அணிக்கும் சம்பளம், பரிசுத் தொகை சமமாக வழங்கப்படுகிறது.

13 பதக்கம்
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13 பதக்கம் வென்றது.
* 8 தங்கம் (1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980) கைப்பற்றியது.
* 1960ல் வெள்ளி, 1968, 1972, 2021, 2024 என நான்கு முறை வெண்கலம் வென்றது.

வியக்கத்தக்க பயணம்
எச்.ஐ., தலைவர், முன்னாள் வீரர் திலீப் டிர்கே கூறுகையில்,'' நீண்ட பாரம்பரியம், வியக்கத்தக்க பயணத்தை கவுரவிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் கொண்டாடப் பட உள்ளன,'' என்றார்.

Advertisement