துருவ் ஜுரல் அரைசதம்
மெல்போர்ன்: இந்தியா 'ஏ' அணியின் துருவ் ஜுரல் அரைசதம் விளாசினார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (4 நாள்) பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி வெற்றி பெற்றது. மெல்போர்னில் இரண்டாவது போட்டி நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்தியா 'ஏ' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (0), சாய் சுதர்சன் (0), லோகேஷ் ராகுல் (4), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (4) ஏமாற்றினர். தேவ்தத் படிக்கல் (26), நிதிஷ் குமார் ரெட்டி (16) நிலைக்கவில்லை. தனுஷ் (0), கலீல் அகமது (1) விரைவில் அவுட்டாகினர். தனிநபராக அசத்திய துருவ் ஜுரல் (80) நம்பிக்கை தந்தார். 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியில் சர்பராஸ் கானுக்கு பதிலாக 'மிடில்-ஆர்டரில்' துருவ் ஜுரல் இடம் பிடிக்கலாம். பிரசித் கிருஷ்ணா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 161 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா 'ஏ' அணி சார்பில் மைக்கேல் நேசர் 4, பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா 'ஏ' அணி, ஆட்டநேர முடிவில் 53/2 ரன் எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் (26), சாம் கான்ஸ்டாஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' அணி சார்பில் முகேஷ் குமார், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.