வாகன ஓட்டிகளை மூச்சுத்திணற வைக்கும் அடையாறு ஆவின் ரவுண்டானா நெரிசல்

அடையாறு சென்னையில் முக்கிய பகுதியாக அடையாறு உள்ளது. இ.சி.ஆர்., - - ஓ.எம்.ஆர்., கிண்டி, பெசன்ட் நகர் பகுதியில் இருந்து, கிரீன்வேஸ் சாலை, மயிலாப்பூர், மெரினா கடற்கரைக்கு, அடையாறு ஆவின் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். இதனால், இந்த பகுதியில் எப்போதும், வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், ஆவின் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, இருவழி, மூன்று வழியாக சென்ற சாலையில் தடுப்பு அமைத்து, சாலை குறுகலாக மாற்றப்பட்டு உள்ளது.

இரண்டு பேருந்து, கார், பைக் ஆகியவை, ஒரே நேர்கோட்டில் சென்ற நிலையில், தற்போது, ஒரு கார், ஒரு பைக் மட்டுமே செல்லும் வகையில் உள்ளது.

குறிப்பாக, பெசன்ட் நகரில் இருந்து கிரீன்வேஸ் சாலை, கிண்டியில் இருந்து பெசன்ட் நகர், திரு.வி.க., பாலத்தில் இருந்து காந்தி நகர் நோக்கி செல்லும் வாகனங்கள், ஆவின் ரவுண்டானாவை சுற்றிச்செல்ல வேண்டும்.

ரவுண்டானாவை சுற்றி வரும் பகுதியில், சாலையின் பெரும் பகுதியை சேர்த்து தடுப்பு அமைத்துள்ளதால், மூன்று திசையில் இருந்து வரும் வாகனங்கள், எளிதில் திரும்ப முடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.

மேலும், திரு.வி.க., பாலத்தில் இருந்து காந்தி நகர் நோக்கி செல்ல, யு - டர்ன் அமைத்தும், அதில் செல்ல முடியாத வகையில் நெரிசல் ஏற்படுகிறது.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

காலை, மாலை நேரத்தில் ஆவின் ரவுண்டானாவில் நெரிசல் அதிகரிப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. ஏதாவது ஒரு வாகனம் பழுதாகி நின்றுவிட்டால், நெரிசல் மூச்சுத் திணற வைக்கிறது.

சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒரு பகுதியில் பணியை முடித்த பின், மறு திசையில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளலாம்.

ரவுண்டானா பகுதியில் வைத்துள்ள தடுப்பை, ஒரு வாகனம் செல்லும் வகையில் இடம் விட்டு நகர்த்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, 'மெட்ரோ பணிக்காக, மேம்பாலத்திலும் இருவழிபாதையாக மாற்றிவிட்டோம். ரவுண்டானா பகுதியில் தடுப்பை நகர்த்தி வைத்தால் ஓரளவு நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கூறி உள்ளோம்' என்றனர்.

Advertisement