சுரங்கத்தில் 3வது பாக்ஸ் பொருத்தும் பணி துவக்கம்

தாம்பரம், தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பாலத்தில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலை இருவழிப்பாதையாக உள்ளது. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், இந்த பாலத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு ரயில்வே பாலத்தையும், சாலையையும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதியினர் பயன்படுத்தும் வகையில், வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இச்சுரங்கப்பாதை, 'ப்ரீகாஸ்ட்' ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையில் அமைக்கப்படுகிறது. இந்த முறையில், 195 அடி நீளத்திற்கு ஐந்து ரெடிமேட் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.

இரு பெட்டிகள் பொருத்தப்பட்ட நிலையில், மூன்றாவது பெட்டியை 'புஷ்சிங்' செய்யும் பணி, நேற்று துவங்கியது.

மற்றொருபுறம், சாலை விரிவாக்க பணி முடிந்துவிட்டதால், எஞ்சிய இரண்டு ரெடிமேட் பெட்டிகளை பொருத்துதல் மற்றும் கிழக்கு பகுதியில் ஏற்கனவே உள்ள ரயில் சுரங்கப்பாதையை அகற்றி, புதிய பாதை கட்டும் பணிக்காக, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதாவது, தாம்பரத்தில் இருந்து பெருங்களத்துார் மார்க்கத்தில், சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த பாதையிலேயே, இருவழி போக்குவரத்தையும் திருப்பிவிட திட்டமிட்டுள்ளனர்.

Advertisement