போலீசாரை தள்ளிவிட்டு தப்பிய லாக்கப் கைதி
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் இருந்த விசாரணை கைதி பெருமாள்சாமி 28, போலீஸ்காரர் தங்கராஜை தள்ளிவிட்டு தப்பியோடினார்.
தேவதானப்பட்டி அல்மீன்நகரைச் சேர்ந்த பஞ்சு வியாபாரி சேக் அப்துல்லா 42. அரிசிக்கடை பகுதியில் நவ., 4 நடந்து சென்றார். அப்போது தெற்கு தெருவைச் சேர்ந்த பெருமாள்சாமி சேக் அப்துல்லாவை வழிமறித்து சட்டையை பிடித்து இழுத்து மது குடிக்க பணம் கேட்டார். பணம் தர மறுத்ததால் கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.
எஸ்.ஜ., ஜான்செல்லத்துரை விசாரித்து பெருமாள்சாமியை கைது செய்தார். அவர் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் அடைக்கப்பட்டார். பெருமாள்சாமி மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என சிறப்பு எஸ்.ஐ., சந்தனக்குமார், போலீசார் வினோத் விசாரித்தனர். பிறகு இருவரும் சாப்பிட சென்றனர்.
லாக்கப்பில் இருந்த பெருமாள்சாமி மதியம் 2:30 மணிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் தங்கராஜிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். தங்கராஜ் தண்ணீர் கொடுத்தபோது திடீரென அவரை தள்ளிவிட்டு ஓடினார். அங்கு வந்த சிறப்பு எஸ்.ஐ., சந்தனக்குமார், தங்கராஜை விரட்டினார்.
ஆனால் தெற்குதெரு வழியாக ஓடி பெருமாள்சாமி தப்பி விட்டார். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.