வழக்கை சரியாக நடத்தாததாக எழுந்த சந்தேகத்தில் வழக்கறிஞரை கொன்று எரித்த இளைஞர் கைது
நாகர்கோவில்:வழக்கை சரியாக நடத்தாததால் சொத்து பத்திரத்தை திரும்ப கேட்டும் தராத ஆத்திரத்தில் வழக்கறிஞரை வெட்டிக் கொன்று எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பீமநகரியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து 21. இவர் தன் சொத்து தொடர்பான வழக்கை நடத்துவதற்கு தக்கலை அருகே முட்டைகாடு சரல்விளையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபியிடம் 55, பத்திரங்களை ஒப்படைத்திருந்தார்.
ஆனால் கிறிஸ்டோபர் சோபி வழக்கை சரிவர நடத்தவில்லை என இசக்கிமுத்து சந்தேகப்பட்டுள்ளார். எதிர் தரப்பு வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டு இவர் இவ்வாறு செய்வதாக இசக்கிமுத்து கருதினார்.
இதனால் சொத்து பத்திரங்களை திரும்ப தரும்படி இசக்கிமுத்து கேட்டும் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொடுக்காமல் நாட்களை கடத்தினார். இந்நிலையில் தனக்கு சில வாழை கன்றுகள் வேண்டும் என இசக்கிமுத்துவிடம் கிறிஸ்டோபர் சோபி கேட்டுள்ளார். நேரம் பார்த்து காத்திருந்த இசக்கி முத்து அவரை பீமநகரி மண் ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள குளக்கரைக்கு வரும்படி கூறினார்.
அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வழக்கு தொடர்பாகவும் சொத்து பத்திரங்கள் சம்பந்தமாகவும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இசக்கிமுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் கிறிஸ்டோபர் சோபியை வெட்டி கொலை செய்தார். பின் அவரது உடலை இழுத்து சென்று தீ வைத்தார்.
பீமன் நகரி அருகே ஒரு உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது இசக்கிமுத்து அரல்வாய்மொழி போலீசில் சரணடைந்தார்.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக கொலை செய்தாரா அல்லது வேறு ஆட்களின் உதவியுடன் கொலை செய்தாரா என அவரிடம் விசாரணை நடக்கிறது.