சபரிமலை தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட்டும் 'ரிசர்வேஷன்' கேரள போக்குவரத்து அமைச்சர் தகவல்

சபரிமலை:''சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பம்பைக்கான பஸ் டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம்,'' என கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறினார்.

சபரிமலையில் மண்டல காலம் நவ., 16-ல் தொடங்குகிறது. இதற்காக நவ., 15 மாலை நடை திறக்கப்படுகிறது.

பத்தினம்திட்டையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அதன் தலைவர் பிரஷாந்த் கூறியதாவது:

ஸ்பாட் புக்கிங் செய்ய வசதியாக சத்திரம் - வண்டிப்பெரியாறு, எருமேலி, பம்பை ஆகிய மூன்று இடங்களில் கவுன்டர்கள் திறக்கப்படும்.

சீசனில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரீமியம் இல்லாமல், 5 லட்சம் ரூபாய் காப்பீடு வசதிக்கு தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பம்பைக்கு வந்து செல்வதற்கான பஸ் டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம் என கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் கூறினார்.

அதுபோல, 40 பேர் கொண்ட குழுக்கள் பத்து நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்தால், அவர்களுக்காக தனி பஸ் இயக்கப்படும்.

நிலக்கல் பம்பைக்கு இடையே அரை நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும் என்றும், 220 பஸ்கள் இதற்காக கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Advertisement