ஸ்ரீவி., மலையடிவார தோப்புகளில் யானைகள் மீண்டும் நடமாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடேஸ்வரபுரம் சித்தர் பீடம் பகுதியில் யானைகள் புகுந்து தோப்புகளில் இருந்த மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. துவக்கத்தில் அடிவாரத்தில் மட்டுமே நடமாடிய யானைகள் அடுத்தடுத்த நாட்களில் அதனையும் கடந்து மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு பகுதிகளில் உள்ள தோப்புகளில் புகுந்து மா, தென்னை, கரும்புகளை சேதப்படுத்தி வந்தது.

இது குறித்து விவசாயிகளின் தொடர் புகாரில் வனத்துறையினர் மலையடிவாரத் தோப்புகளில் இரவு, பகலாக ரோந்து சென்றும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை.

இந்நிலையில் பிள்ளையார் நத்தம் பகுதியில் சிறுத்தை ஒன்று கன்று குட்டியை கடித்துக் கொன்ற சம்பவம் விவசாயிகளை மேலும் அச்சப்பட வைத்தது.

வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், தற்போது வேறு இடத்தில் கேமராவை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலையில் வெங்கடேஸ்வராபுரம் கிராமம் சித்தர் பீடம் பகுதியில் 3 யானைகள் அப்பகுதியில் உள்ள தோப்புகளில் புகுந்து மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. காலையில் தோப்பிற்கு சென்ற விவசாயிகள் இதனை பார்த்து அச்சமடைந்தனர்.

தோப்புகளில் யானைகள் நடமாட்டத்தை முழு அளவில் கட்டுப்படுத்த வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement