50 நெல் அறுவடை இயந்திரங்கள் ஆந்திராவிற்கு அனுப்பி வைப்பு
வானுார்: ஆந்திர மாநிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக, திண்டிவனம் மற்றும் கிளியனுார் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.
இதற்காக கிளியனுார், திண்டிவனம், மரக்காணம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் லாரிகள் மூலம் 50க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள், ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை சீசன் இல்லாததால், அறுவடை இயந்திரங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலத்தில் நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இதனால் திண்டி வனம், கிளியனுார் பகுதி யைச் சுற்றியுள்ள நெல் அறுவடை இயந்திரங்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கு நெல் அறுவடை மற்றும் வைக்கோல் போர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும். மேலும், இன்னும் 2 மாதங்களுக்கு அந்த மாநிலத்திற்குள், இந்த இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.