செய்தி சில வரிகளில்...
தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
மயிலத்தில், சட்டசபை தொகுதி மத்திய ஒன்றியம் சார்பில் நடந்த கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் சந்திப்பு கூட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மலர் மன்னன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் ராஜா வரவேற்றார்.
மயிலம் தொகுதி பார்வையாளர் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் பாக முகவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய அவைத்தலைவர் பரசுராமன், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அலுவலர் பொறுப்பேற்பு
திருக்கோவிலுார் வட்ட வழங்கல் அலுவலராக, பாஸ்கரன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலராக பொறுப்பேற்றார். ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற மனு
வீட்டு மனைகள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், விளம்பார் கிராமத்தில் வீட்டு மனை போடப்பட்ட இடத்தில் 61 பேர் வீட்டு மனைகள் வாங்கியுள்ளோம். இந்நிலையில், நாங்கள் வாங்கிய வீட்டு மனைகள் இடத்தினை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை திறப்பு விழா
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் ஜெயசித்ரா டேவிட் தலைமை தாங்கி, பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு விதை வழங்கல்
வானுார் அடுத்த வெள்ளகுளத்தில் உள்ள வி.சி.டி.எஸ்., மையத்தில் நடந்த விவசாயிகளுக்கு விதை வழங்கும் நிகழ்ச்சியில் திட்ட மேலாளர் ஜோஸ்பின் பவித்ரா தேவி வரவேற்றார். நிறுவனர் கவுசல்யா தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் மணி முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சீனிவாசன், விவசாயிகளுக்கு விதைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். வேளாண் உதவி இயக்குனர் சரவணன் கருத்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், ஏசுராஜ் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு அடையாள அட்டை
திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் அமைப்பு, கிங் ஆப் கிங் நண்பர்கள் குழு சார்பில் அடையாள அட்டை, டை மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
நிவாரண பொருட்கள் வழங்கல்
திருக்கோவிலுார், தாசார்புரத்தில், ராஜா, பார்வதி தம்பதியர்களின் கூரை வீடு காஸ் கசிவு காரணமாக சமீபத்தில் எரிந்து சேதமானது. வீடிழந்த குடும்பத்திற்கு திருக்கோவிலுார் முன்னாள் முப்படை வீரர்களின் நலச் சங்கம் சார்பில், அதன் செயலாளர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாணகுமார், சமையல் பாத்திரங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு
சின்னசேலம் வட்டார வள மையத்தில் கல்விப்பணி, மாணவர்களின் கற்றல் அறிவு நிலைகள், காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி ஆய்வு நடத்தினார். ஒன்றியத்தை சேர்ந்த அரசு மற்றும் நிதியுதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 87 பேர், தங்களது பள்ளிகளின் தரம், கற்றல்-கற்பித்தல், காலை உணவு திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வறிக்கையை சமர்பித்தனர். ஏற்பாட்டினை வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர், தனபால் செய்திருந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் நடந்த, பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, போதைப் பொருள் மற்றும் மொபைல் போன்களால் ஏற்படும் தீமைகள், பெண் பிள்ளைகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
பணி ஓய்வு பாராட்டு விழா
செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை, சத்தியமங்கலம், பாடிபள்ளம் கிராமங்களில் அரசு பள்ளிகளில் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்கள் கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் பணி ஓய்வு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஓய்வு பெறும் சத்துணவு சமையலர்கள் நவநீதம், உதவியாளர்கள் சின்னக்கண்ணு, சாரதாம்பாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பி.டி.ஓ., சீத்தாலட்சுமி, ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, குமார், சத்துணவு இளநிலை உதவியாளர்கள் பங்கேற்றனர்.
மது ஒழிப்பு விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) உத்தரவின் பேரில், நாகவரம், வெள்ளிமேடுப்பேட்டை, மொளசூர் கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் மது ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் தொடர்பாகவும், போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து மண்ணில் கலைகள் குழுவினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோட்ட கலால் அலுவலர் கோவர்தனன், வருவாய் ஆய்வாளர் கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
பா.ம.க., ஆர்ப்பாட்டம்
வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி மீது கொலை மிரட்டல் விடுத்த வி.சி., நிர்வாகிகள் மற்றும் மஞ்சக்கொள்ளை பா.ம.க., பிரமுகரை தாக்கியவரையும் கைது செய்யக் கோரி, மாவட்ட பா.ம.க., சார்பில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க செயலாளர் குமரகுருபரன் வரவேற்றார். தலைவர் தங்கஜோதி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் புண்ணியகோடி, துணைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.