ஒளிருமா சூர்யா படை... 'டி-20' தொடர் இன்று துவக்கம்

டர்பன் : இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் 'டி-20' போட்டி இன்று(நவ.,08) டர்பனில் நடக்கிறது. சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய வீரர்கள் சாதிக்க காத்திருக்கின்றனர்.


தென் ஆப்ரிக்கா சென்றுஉள்ள இந்திய அணி, 4 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று டர்பன், கிங்ஸ்மேட் மைதானத்தில் நடக்கிறது. முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலியா தொடருக்கு செல்லும் நிலையில், கேப்டன் சூர்யகுமார் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்குகின்றனர்.

துவக்கம் எப்படி



துவக்க வீரர் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன், வங்கதேச தொடரில் 47 பந்தில்111 ரன் விளாசினார். துவக்க இடத்தை தக்கவைக்க முயற்சிக்கலாம். அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே மண்ணில் 47 பந்தில் சதம் அடித்தார். பின் களமிறங்கிய 6 போட்டியிலும் (0, 10, 14, 16, 15, 4 ரன்) ஏமாற்றினார். சுழற்பந்தில் கைகொடுக்கும் அபிஷேக், பேட்டிங்கில் மீண்டு வந்தால் நல்லது.



தவிர, சீனியர் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ரிங்கு சிங், விக்கெட் கீப்பர்ஜிதேஷ் சர்மா பின் வரிசை பேட்டிங்கில் உதவ காத்திருக்கின்றனர்.

புதிய கூட்டணி



அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் வேகப்பந்து வீச்சை கவனித்துக் கொள்வர். இவர்களுடன் வைஷாக், ராமன்தீப் சிங் என யாராவது ஒருவர் சேர்க்கப்படலாம். சுழலில் வங்கதேச தொடரில் அசத்திய வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், ரவி பிஷ்னோய் உள்ளதால் அணியில் இடம் பெற போட்டி காணப்படுகிறது.

பதிலடி தருமா



கடந்த ஜூன் 29ல் நடந்த டி-20' உலக கோப்பை பைனலில் இந்தியாவிடம் தோற்ற விரக்தியில் களமிறங்குகிறது தென் ஆப்ரிக்க அணி. இந்த தோல்விக்கு சொந்தமண்ணில் பதிலடிதர முயற்சிக்கலாம். கேப்டன் மார்க்ரம், ஹென்ரிக்ஸ், கிளாசன், அனுபவ டேவிட் மில்லர் அணியில் தொடர்கின்றனர்.


வேகத்தில் ஜான்சென், சுழலில் மஹாராஜ் என சீனியர் இருப்பது இந்திய வீரர்களுக்கு நெருக்கடி தரலாம்.

Advertisement