அண்ணா விளையாட்டு திடல் கடைகள் விரைவில் வியாபாரிகளிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி: அண்ணா விளையாட்டு திடலை சுற்றி உள்ள பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள், வியாபாரிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளன.

உருளையன்பேட்டை தொகுதியில், அண்ணா விளையாட்டு திடல் உள்ளது. தற்போது, இந்த திடலை புதுப்பிக்கும் மற் றும் மேம்படுத்தும் பணிகள், ஸ்மார்ட் சிட்டி நிதியுதவியுடன் நடந்து வருகின்றன. மேலும் இந்த திடலை சுற்றியுள்ள அண்ணாசாலை, லப்போர்த் வீதி, சின்ன சுப்பராய பிள்ளை ஆகிய பகுதிகளில், புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன.

அந்தக் கடைகளை கடந்த காலங்களில் அதை நடத்தியவர்கள் மற்றும் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட உரிமம் வைத்திருப்பவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்த சாமியிடம் நேற்று நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.

இந்த நிலையில் ஆணையர், அந்த கடைகளை ஒதுக்குவதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு, தற்போது உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் அந்த கடைகளின் சாவிகள் முதல்வரால் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவரிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், வருவாய் அதிகாரி பிரபாகரன் மற்றும் அண்ணா திடல் கடை வியாபாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement