மதுரை, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

1

சென்னை: 'கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில், 13 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:




தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, கடல் பரப்பில் இருந்து, 3.1 கி.மீ., உயரத்தில் நிலவுகிறது.


இதையொட்டி, மன்னார் வளைகுடா முதல் மத்திய கிழக்கு வங்கக் கடல் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையும் நிலவுகிறது. இதில், படிப்படியாக ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், மிதமான மழை பெய்யலாம்.

கனமழை



கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கன மழை பெய்யும்.


நாளை கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


வடமாவட்டங்கள், தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோர பகுதிகளில், இன்று மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளி காற்று வீசலாம் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நவ.,11ல் சென்னைக்கு மஞ்சள் 'அலர்ட்'


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். வரும், 11ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, தற்போதைய நிலவரப்படி, அன்றைய தினத்திற்கு, 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement