டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்று தீவிரம்; 'மாஸ்க்' அணிவது அவசியம்
சென்னை: ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன், பருவகால தொற்றும் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும்,'' என, பொது சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன், மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
'ப்ளூ' வைரஸ்களால் பரவும், இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று பரவலும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் மருத்துமவனை சென்று, சிகிச்சை பெற வேண்டும். டாக்டர்கள் நோயின் தீவிரத்துக்கு ஏற்ப சிகிச்சை வழங்குவர்.
மிதமான பாதிப்புகள் இருந்தால், 'ஆன்ட்டி' வைரல் மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாட்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி ஓய்வு எடுக்க செய்தால் போதுமானது. அதேநேரம், தீவிர பாதிப்பு உள்ள, 65 வயதுக்கு மேற்பட்டோர், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர், கர்ப்பிணியர், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு, 'ஓசல்டாமிவிர்' என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.
அதேபோல, தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களை, அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயதுடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
'ஓசல்டாமிவிர்' உள்ளிட்ட மருந்துகளுடன், மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும்.மருத்துவ துறையினர், சுகாதார களப்பணியாளர்கள், முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல, பொது இடங்களுக்கு செல்லும் மக்களும், மூன்று அடுக்கு முகக்கவசம் அணியலாம். இவ்வாறு அவர் கூறினார்.