விதி மீறல் மருத்துவ கல்லுாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

புதுச்சேரி: மத்திய மற்றும் மாநில அரசின் நெறிமுறைகளை பின்பற்றாத மருத்துவக்கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் தனியார் மருத்துவக்கல்லுாரிகள், முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனும் மத்திய மருத்துவ கவுன்சில் மற்றும் சுகாதாரத்துறை அறிவித்த நெறிமுறைகளை பின்பற்றவில்லை.

சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு, குற்றச்சாட்டுக்கு உள்ளான கல்லுாரிகளை ஆய்வு செய்து, மாணவர்களிடம் இருந்து புகார்களை பெற்றுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குனரகம் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும், கவர்னர், முதல்வர் உள்ளிட்டவர்களிடம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இதனை மத்திய மருத்துவ கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய மருத்துவ கவுன்சில் நெறிமுறைகளை பின்பற்றாத மருத்துவ கல்லுரிகள், அகில இந்திய தொழில்நுட்ப பல்கலை விதிகளை மீறி செயல்படும் தனியார் கல்லுாரிகள், தேசிய நர்சிங் கவுன்சில் விதிகளை மீறி செயல்படும் செவிலியர் கல்லுாரிகள் மீது சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

Advertisement