திருப்பரங்குன்றத்தில் இன்று தேரோட்டம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மாலை கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.
கோயிலில் நவ. 3 முதல் நடந்த யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தியானபின், தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீர் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உச்சி கால பூஜை முடிந்து உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுதேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
ரத வீதிகளில் சூரபத்மன் முன் செல்ல வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியார் வாள் கொண்டு செல்ல அவர்களை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. யானைமுகம், சிங்கமுகம், ஆட்டுத்தலை உள்பட பல்வேறு உருவங்களில் சூரபத்மன் மாறி மாறி செல்ல இறுதியில் சுப்பிரமணிய சுவாமி சூரனை விரட்டி சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார புராணக் கதையை பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார்.
உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மாலை மாற்றி, தீபாராதனை முடிந்து பூ சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கிரி வீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. சூரசம்ஹார லீலை நிகழ்ச்சியின் போது பலத்த மழை பெய்தது. பக்தர்கள் நனைந்து கொண்டே தரிசனம் செய்தனர்.