குமாரசாமி வழக்கு ஐகோர்ட் கருணை
பெங்களூரு: 'தொழில் அதிபரிடம் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பதிவான வழக்கில், அவர் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது' என்று, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, பெங்களூரு நகர ம.ஜ.த., தலைவர் ரமேஷ் கவுடா ஆகியோர் தன்னிடம் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக, தொழில் அதிபர் விஜய் டாடா கடந்த மாதம் 3ம் தேதி, அம்ருதஹள்ளி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்படி குமாரசாமி, ரமேஷ் கவுடா மீது வழக்கு பதிவானது.
வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் குமாரசாமி மனு செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார். நேற்று நடந்த விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரன வக்கீல் நிஷாந்த், 'இந்த வழக்கில் ரமேஷ் கவுடா மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது' என்று, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதை பரிசீலித்த நீதிபதி, 'நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு, மனுதாரருக்கும் பொருந்தும்' என்று கூறி, மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.