50:50க்கு திட்ட மனைகள் திரும்ப பெற 'முடா' முடிவு
மைசூரு: 'முடா'வில் இருந்து 50:50க்கு திட்டத்தில் கொடுத்த, வீட்டுமனைகளை திரும்பப்பெற முடா முடிவு செய்து உள்ளது.
முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 50:50க்கு திட்டத்தில், வீட்டுமனைகளை ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறின. சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக, சமூக ஆர்வலர் ஸ்னேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
முடாவில் நடந்த முறைகேட்டை, ஓய்வு நீதிபதி தேசாய் தலைமையிலான விசாரணை கமிஷனும் விசாரிக்கிறது. இந்நிலையில் முடா அலுவலகத்தில் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
முடா தற்காலிக தலைவரும், மைசூரு கலெக்டருமான லட்சுமிகாந்த் ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில், முடா உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் ஜி.டி.,தேவகவுடா, ஹரிஷ் கவுடா, ஸ்ரீவத்சவா உள்ளிட்டோரும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முடா தலைவர் லட்சுமிகாந்த் ரெட்டி, ''முடாவில் 50:50 க்கு திட்டத்தில் வீட்டுமனை கொடுத்ததில், விதிகள் மீறப்பட்டு இருப்பதாக புகார் எழுந்து உள்ளது. இதனால் 50:50க்கு திட்ட மனைகளை திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார். இதற்கு எம்.எல்.ஏ.,க்களும் சம்மதம் தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு பின் ஜி.டி.தேவகவுடா கூறுகையில், ''முடாவில் இருந்து 50:50க்கு திட்டத்தில் கிடைத்த, வீட்டுமனைகளை திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முடா முறைகேடு குறித்து ஓய்வு நீதிபதி, லோக் ஆயுக்தா, அமலாக்கத்துறை விசாரிக்கின்றனர். உண்மை வெளிவந்தால் நல்லது. முடா சுத்தமாக வேண்டும் என்பது எங்கள் விருப்பம்,'' என்றார்.