யோகா ஆசிரியையை புதைத்த 4 பேர் கைது
சிக்கபல்லாபூர்: பெங்களூரு, தேவனஹள்ளியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் 30 வயது பெண்ணொருவர், மையம் ஒன்றில் யோகா ஆசிரியராக பணியாற்றுகிறார்; திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால், அவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். ஆசிரியைக்கு, சந்தோஷ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியையிடம் சதீஷ் ரெட்டி, யோகா கற்பதற்காக சென்றார். இவர் முன்னாள் ராணுவ வீரராவார். துப்பாக்கி சுட கற்றுத்தருவதாக கூறி, அவ்வப்போது ஆசிரியை வீட்டுக்கும் சென்றுள்ளார்.
இந்நிலையில் அக்டோபர் 23ம் தேதி, சதீஷ்ரெட்டி, ஆசிரியையை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, காரில் கடத்தி சென்றார். சிக்கபல்லாபூர், சித்லகட்டாவின், திப்பூரஹள்ளியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.
ஆசிரியை எதிர்த்து போராடியதால், அவரை கழுத்தை நெரித்தார். அப்போது, ஆசிரியை இறந்தது போன்று நடித்தார். அவர் இறந்ததாக நினைத்த சதீஷ் ரெட்டி, தன் கூட்டாளிகளை அங்கு வரவழைத்தார். அரை நிர்வாணமாக இருந்த ஆசிரியையை பள்ளம் தோண்டி, அதில் அவரை போட்டுவிட்டு மரக்கிளைகளால் மூடிவிட்டு தப்பினர். அதன்பின் பள்ளத்தில் இருந்து எழுந்து, வெளியே வந்த ஆசிரியை, அப்பகுதியினரிடம் நடந்ததை கூறி, உடை வாங்கி அணிந்து கொண்டார்.
அதன்பின் திப்பூரஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீசார், சதீஷ் ரெட்டி, 40, ரமணா, 35, சல்மான், 35, ரவி, 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
சதீஷ் ரெட்டி தனியார் டிடெக்டிவ் ஏஜன்சி நடத்தி வருகிறார். இவருக்கு பணம் கொடுத்து, யோகா ஆசிரியையை கொலை செய்யும்படி ஏவியது, இவரது கள்ளக்காதலர் சந்தோஷ் குமாரின் மனைவி என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.