ஒற்றை வார்த்தையில் குப்புற விழுந்தது வாழ்க்கை; ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் கண்ணீர் கதை!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஓகே என்ற ஒற்றை வார்த்தையால், ஸ்டேஷன் மாஸ்டருக்கு வேலை போன சோகம் அரங்கேறியுள்ளது.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவருக்கும், சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும், அவரது மனைவி முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சூழலில், ஒருநாள் ஸ்டேஷன் மாஸ்டர் இரவு பணியில் இருக்கும் போது, மனைவியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது, செல்போனில் இருவரும் காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 'எதுவாக இருந்தாலும் வீட்டில் வந்து பேசிக் கொள்ளலாம், ஓகே' என்று ஸ்டேஷன் மாஸ்டர் தன் மனைவியிடம் கூறியுள்ளார்.
ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது, அலுவலக மைக்ரோ போன் ஆன் செய்யப்பட்டிருந்தது. அவர் 'ok' என்று சொன்ன கடைசி வார்த்தை, தனக்கு சொன்னதாக நினைத்த மறுமுனையில் லைனில் இருந்த ரயில்வே ஊழியர், க்ரீன் சிக்னல் போட்டுள்ளார். இதன் காரணமாக, மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியில் சரக்கு ரயில் சென்று சிக்கிக் கொண்டது. இதன்மூலம், ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஏற்கனவே கணவன் -மனைவி உறவு பிரச்னையில் உள்ள நிலையில், ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்டும் செய்யப்பட்டதால், அவரது மனைவிக்கு இளக்காரமாக போனது. வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்களை கணவன் மீது போலீசில் அளித்து விட்டார்.
இதனால் பொறுமை இழந்த ஸ்டேஷன் மாஸ்டர், விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்தார். வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சத்தீஸ்கர் ஐகோர்ட், இருவருக்கும் விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்தது.
ஒரே ஒரு வார்த்தை கூட, ஒருவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விடும் என்பதற்கு இந்த சம்பவம் தான் ஒரு உதாரணம்.