சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!
புதுடில்லி: ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி துபாயில் விளையாட தயாராக உள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ., கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். இதில் 2002, 2013ல் சாம்பியன் ஆன இந்தியா, 2017ல் பைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது 8 ஆண்டுக்குப் பின் பாகிஸ்தானில் இத்தொடர் அடுத்த ஆண்டு பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் சென்றதில்லை. 2012-13ல் மட்டும் பாகிஸ்தான் இந்தியா வந்து, 'டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதன் பின் ஐ.சி.சி., தொடரில் மட்டும் இரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2023 ஆசிய கோப்பை தொடருக்காக இந்தியா, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்தியா பங்கேற்ற போட்டிகள் இலங்கையில் நடந்தன. சாம்பியன்ஸ் டிராபில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கான உத்தேச அட்டவணை வெளியானது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா மோதும் போட்டிகள் லாகூரில் மட்டும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டோம். இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்தலாம் எனக்கூறியுள்ளோம். இது தான் எங்களது நிலைப்பாடு. இதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.