பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தடுக்க உ.பி., மகளிர் ஆணையத்தின் புது ஐடியா
லக்னோ: உ.பி.,யில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க அவர்களின் ஆடைகளை ஆண்கள் தைக்கக்கூடாது. சலூன்களில் பெண்களுக்கு பெண்களே முடி திருத்தம் செய்ய வேண்டும் என அம்மாநில மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் கடந்த 28 ம் தேதி ஆலோசனை செய்து மாநில அரசுக்கு பல பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஹிமானி அகர்வால் கூறியதாவது: பெண்கள் அணியும் ஆடைகளை ஆண்கள் தைக்கக்கூடாது. இதற்காக பெண்களை அளவு எடுக்கும் பணிகளில் ஆண்கள் ஈடுபடுத்தக்கூடாது. பெண்கள் மட்டுமே இத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும். அந்த இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட வேண்டும் என தலைவர் பபிதா சவுகான் முன்மொழிந்தார். இதனை மற்றவர்கள் ஆதரித்தனர்.
அதேபோல் முடி திருத்தும் நிலையங்களில், பெண்களுக்கு பெண்கள் மட்டுமே முடி திருத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். இத்தகைய பணிகளில் ஈடுபடும் ஆண்களில் சிலர் பெண்களை பாலியல் சீண்டல் செய்வதாக தகவல் வந்தது. அவர்கள் பெண்களை தவறான நோக்கத்துடன் தொடுகின்றனர். அவர்களின் எண்ணமும் சரியாக இல்லை. இது குறித்து உரிய சட்டத்தை இயற்றும்படி மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.